67. பரசிவமே அனைத்தையும் நிற்பிக்கின்றது

1250

தாமே நேரடியாகவும் செவ்வியுடைய உயிர்களுக்கு உரிமம்(அதிகாரம்) கொடுத்தும் பரசிவம் தோற்றுவித்தல் அல்லது படைத்தல் தொழிலைச் செய்கின்றது என்று திருமந்திரத்தின் இரண்டாம் தந்திரம் குறிப்பிடுகின்றது. கரு, முட்டை, வியர்வை, விதை என்று நால்வகைத் தோற்றத்தினாலும் தேவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்னும் எழுவகைப் பிறப்பினாலும் தோன்றும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் உயிர் வகைகளுக்குத் தேவையான உலகம், உடல், கருவிகள், நுகர்ச்சிப் பொருள்கள் ஆகியவற்றைத் தோற்றுவித்துக் கொடுப்பது பரசிவமே. பரசிவமே உலகம், உடல், கருவிகள், நுகர்ச்சிப் பொருள்களைத் தோற்றுவித்து உயிர்களின் செவ்விக்கு ஏற்ப அவற்றை அந்த அந்த உயிர்களோடு தொடர்புபடுத்துகின்றான். ஒவ்வொரு பிறவியிலும் உயிர்களுக்கு நுகர்ச்சிக்கு வரவேண்டிய பொருள்களைத் தோற்றுவித்துக் கூட்டுவிப்பதனையே படைத்தல் என்று திருமந்திரம் குறிப்பிடுகின்றது. பரசிவத்தின் ஆற்றலே நான்முகன் வழியும் படைத்தல் தொழிலைச் செய்கின்றது என்பதனைப் பலரும் அறிந்திலர் என்று மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலர் குறிப்பிடுகின்றார்.

உயிர்கள் தம்மிடத்தே உள்ள இன்பத்தினை நுகர செவ்வி உறுதற்பொருட்டுப் பரசிவம் தோற்றுவித்த உலகம், உடல், உடலில் உள்ள கருவிகள், நுகர்ச்சிப் பொருள்கள் யாவற்றையும் பரசிவமே தாமே நேரடியாகவும் பிற செவ்வியுற்ற உயிர்களுக்கு உரிமம் வழங்கியும் நிலை நிறுத்துகின்றது என்று திருமந்திரம் அருளிய திருமூலர் குறிப்பிடுகின்றார். பரசிவம் செய்கின்ற நிலை நிறுத்துதலைக் காத்தல் என்றும் குறிப்பிடுவர். உண்மையை அறியாதவரே மாயோனாகிய திருமாலே காத்தல் அல்லது நிலைநிறுத்துதல் தொழிலைச் செய்கின்றான் என்று குறிப்பிடுவர் என்கின்றார் திருமூலர். செவ்வியுற்ற மாயோன் போன்ற உயிர்கள் உள்ளும் பரசிவமே மாயோனாக நின்று எல்லாவற்றையும் நிலைப்பிக்கின்றது என்கின்றார்.

பரசிவம் ஒன்றே எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நின்று அவற்றை நிலைப்பிப்பதுடன் அவற்றைச் செலுத்தவும் செய்கின்றது என்கின்றார். பரசிவமே திசைகளையும் தேவர்களையும் உடலையும் உடலில் உள்ள கருவிகளையும் கடலையும் மலை முதலானவற்றையும் உலகத் தலைவனாய் ஒவ்வொரு உயிருக்கும் அது செவ்வியடையும் வரையிலும் ஒவ்வொரு பிறவியிலும் அவற்றை அழியாது நிற்பித்தலையும் நடத்துதலையும் செய்கின்றது என்பதனைத், “தானே திசையோடு தேவருமாய் நிற்கும், தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும், தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும், தானே உலகில் தலைவனும் ஆமே” என்று குறிப்பிடுகின்றார்.

சிவம் எனும் பரம்பொருளே பிற பொருள்களுக்குள் அடைக்கப்படாததாய் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கும் பெருவெளியாய் நின்று அனைத்தையும் நிற்பித்தும் நிலைப்பித்தும் செலுத்தவும் செய்கின்றது என்கின்றார் திரூமூலர். பல்வேறு உயிர்களின் உடல்களை அழியாது நிலைப்பித்து, அவ்வுடல்களின் வழி உயிரையும் நிலைப்பித்து அவற்றைச் செலுத்தியும் உலகப் பொருள்கள் யாவற்றையும் காத்து, உலகமாகவே அவற்றின் உள்ளிருந்து, அவற்றைச் செலுத்தியும் அவற்றை நிலைநிறுத்தியும் உயிர்களைக் காக்கின்றது என்கின்றார். உலகமாய், கடலாய், மலை மேகமாய், மழையாய், வானாய், பெருவெளியாய், எங்கும் எதிலும் தங்குவதாய்ப் பரந்து விரிந்து அனைத்திலும் நின்று உயிர்களையும் உலகையும் காத்தும் செலுத்தியும் பரசிவம் நிற்கின்றது என்பதனை, “உடலாய் உயிராய் உலகம் அதாகிக், கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய், இடையாய் உலப்பிலி எங்கும் தானாகி, அடையாப் பெருவெளி அண்ணல் நின்றானே”. என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

பரசிவமே உயிர்களின் தேவைக்கேற்ப கதிரவனில் உயிர்களைக் காக்கும் ஆற்றலாயும் காற்றில் உயிர்களை காக்கும் ஆற்றலாகவும் மழையில் உயிர்களைக் காக்கும் ஆற்றலாகவும் இந்திரன் முதலிய பல தேவர்களின் ஆற்றலாகவும் பல்வேறு சிற்சத்திகளாகவும் பிற தெய்வங்களாகவும் திருமகளாகவும் தோன்றி உயிர்களைக் காத்தும் செலுத்தியும் நிற்கின்றது என்கின்றார். பரம்பொருளான சிவமே நிலம், நீர், தீ, காற்று, வெளி எனும் ஐம்பூதங்களை நிற்பித்தும் அவற்றினால் உலக உயிர்களுக்கு ஏற்படும் அன்பு, இன்ப உணர்வுகளையும் தொடர்ந்து நிலைபெறச் செய்கின்றது என்கின்றார். சிவம் எனும் பரம்பொருளே உயிர்களிடத்தில் சினம், அமைதி, மந்தம் ஆகிய முக்குணங்களையும், இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற முக்காலத்தையும் நிலைநிறுத்தி உயிர்களையும் உலகையும் தொடர்ந்து நிலைபெறவும் இயங்கவும் செய்கின்றது என்கின்றார். பரம்பொருளின் இக்காத்தல் மற்றும் இயக்குதல் ஆற்றலினாலேயே உயிர்கள் அன்பும் அறிவும் அடக்கமும் இன்பமும் பெறுகின்றன என்கின்றார்.

சிவன் எனும் பரம்பொருள் அழித்தலை மட்டும் செய்கின்றது என்ற அறியாமை உடையவர்களுக்குத் திருமூலர் அது தவறு என்று உணர்த்துகின்றார். காப்பதற்கும் உரியதாகச் சிவம் எனும் பரம்பொருள், உலகிற்கும் உயிர்களுக்கும் அம்மை அப்பராக நின்று, தேவர்கள், மாந்தர்களே தவிர, விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் எனும் சிற்றுயிர்களையும் அதுவே காத்தும் செலுத்தியும் நிற்கின்றது என்கின்றார். ஓர் அறிவு உயிர் முதல் ஆறு அறிவு உயிர்கள் வரை உள்ள உயிர்களின் உடலையும் உலகையும் மட்டும் காப்பதல்லாமல் அவற்றின் உட்கருவிகளையும் காத்து நிற்பது பரம்பொருள் என்கின்றார் திருமூலர். உயிர்களின் கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற புறக்கருவிகளையும் அவற்றின் செயற்பாடுகளான பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் எனும் புலன்களின் உணர்வுகளையும் மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் மனவெழுச்சியையும் ஒவ்வொரு பிறவியிலும் அவ்வுயிருக்குத் தேவைப்படும் கால அளவு வரையிலும் பரம்பொருளே நிலைநிறுத்தவும் செயற்படுத்தவும் செய்கின்றது என்பதனை, “உள்உயிர்ப்பாய் உடலாகி நின்றான் நந்தி, வெள்உயிராகும் வெளியாய் விளங்கொளி, உள்உயிர்க்கும் உணர்வே உட்பரம், தள்உயிராம் வண்ணம் தாங்கி நின்றானே” என்கின்றார்.

பரசிவம் பொன்னையும் பொருளையும் கொடுக்காது. உள்ள பொருளைத் தொலைப்பது என்று எண்ணிப் பொன்னையும் பொருளையும் வேண்டுபவர் பலர் வேறு கடவுளரை வேண்டிச் செல்வர். இத்தகைய அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்ச் சைவர்களுக்குக் சிவம் தான் பொன்னும் பொருளும் மட்டும் அன்றி நுகர்ச்சிப் பொருளையும் திருவருளையும் அளிக்க வல்லது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். கல்விக்கு ஒரு கடவுள், செல்வத்திற்கு ஒரு கடவுள், வீரத்திற்கு ஒரு கடவுள், தொழிலுக்கு ஒரு கடவுள், பாதுகாப்பிற்கு ஒரு கடவுள், திருமணத்திற்கு ஒரு கடவுள், இறப்பிற்கு ஒரு கடவுள், பிறப்பிற்கு ஒரு கடவுள் என்று பேதலித்துத் தடுமாறுகின்ற மாந்தருக்கு இவை அனைத்தையும் சிவம் எனும் பரம்பொருளே செய்ய வல்லது எனும் தெளிவினைத் திருமூலர் அளிக்கின்றார்.

சிவம் எனும் பரம்பொருளே பொன்னையும் பொருளையும் கொடுப்பதோடு மட்டும் அல்லாமல் அதனை நிலைநிறுத்தவும் செய்ய வல்லது என்கின்றார் திருமுலர். இதனையே, “பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் திருவும் புணர்ப்பானை” என்று சுந்தரமூர்த்தி அடிகளும் குறிப்பிடுவார். இதனையே, “உய்ப்பனவும் துய்ப்பனவும் தோற்றுவாய் நீ, …..நிலையாக என் நெஞ்சில் நின்றாய் நீ…” என்று திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார். பின்பு பொன்னும் பொருளும் எப்பொழுது உயிர்களுக்குத் தேவை இல்லையோ அப்பொழுது அவற்றைத் தவறாமல் சிவம் மீட்டுக் கொள்ளும் என்பதையும் திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார்.

எனவே சிவம் எனும் பரம்பொருள் உயிரைப் பறித்தலுக்கு மட்டும் உரிய கடவுள் என்றும் சிவத்தை வழிபட்டால் நம்மிடம் உள்ள செல்வம் நம்மை விட்டு அகலும் துன்பம் தொடர்ந்து வந்து வாட்டும் என்ற அறியாமையில் உழன்று, அதனை உண்மை என்று நம்பி, சிவ வழிபாட்டினைத் தவிர்த்து வாழும் பேதைமையை விட்டு ஒழிக்க வேண்டும். படைப்பதோடு மட்டுமல்லாமல் படைத்தவற்றை நிலைநிறுத்தியும் அவற்றைச் செலுத்தியும் உயிர்களுக்கு நாளும் நன்று ஆற்றி வரும் பரம்பொருளின் பரிவையும் பரத்துவத்தையும் உணர்ந்து உண்மைச் சைவர்களாக வாழ்வோமாக! சைவர்களே தங்கள் வழிபடு முழுமுதற்பொருளான சிவத்தை அறியாமல் வாழும் அவலத்தை விட்டொழிப்போமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!