96. அகத்தவம் எட்டில் வளிநிலை

1078

சிவயோகம் என்ற சிவச் செறிவின் முழுப்பயனையும் அடைந்த திருமூலர் சிவச் செறிவின் நான்காவது படிநிலையாக வளிநிலையைக் குறிப்பிடுகின்றார். வளிநிலையைப் பிராணாயாமம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். வளிநிலையில் பிராணவாயு என்று வடமொழியில் குறிக்கப்படும் மூச்சுக் காற்று அல்லது உயிர்ப்பு வளியினை அடக்கும் வழியினைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். உடல் வலிமையோடு இருப்பதற்கும் வலிமை குன்றி இருப்பதற்கும் உடல் உறுப்புக்களே பெரும் துணையாக இருக்கின்றன. இருதயம், மூளை போன்ற உடல் உறுப்புகளும் பிறவும் சிறப்புடன் முறையாகச் செயல்பட உடலில் குருதியின் ஓட்டம் முதன்மையாக உள்ளது. குருதியின் ஓட்டம் மூச்சுக் காற்று அல்லது உயிர்ப்பு வளியின் இயக்கத்தைச் சார்ந்து உள்ளது. உயிர்ப்பு வளியின் இயக்கத்தை வழிப்படுத்தினால் உடல் நோயற்று, வலிமை பெற்று உள்ளமும் கிளர்ச்சி அடையும் என்கின்றார் திருமூலர்.

உயிர்ப்பு வளியின் துணையால் கிளர்ச்சியுற்று ஓடும் இயல்பினை உடைய மனதை அடக்கி, உயிர்ப்பு வளியை வெளியே செல்லாது உடம்பிற்குள்ளேயே அடங்கி இருக்கச் செய்யும் முயற்சியே பிராணாயாமம் அல்லது வளிநிலை எனப்படுகின்றது என்கின்றார் திருமூலர். எனவே வளிநிலையாகிய இந்நான்காம் படிநிலையின் நோக்கம் மனதை அடக்குதல் என்பது புலனாகும். வளிநிலைக்கு முந்திய படிநிலைகளான தீது அகற்றல், நன்று ஆற்றுதல், இருக்கைகள் என்பனவற்றைக் கைவரப்பெற்றவர்கள் உயிர்ப்பு வளியினை அடக்கி மனதை அடக்குதல் வேண்டும் என்கின்றார் திருமூலர். உயிர்ப்பு வளியினை அடக்குவதன் வழி உடம்பை நீண்ட காலம் நிலைநிறுத்தி இறைவனின் திருவருளோடு அவனை உணரும் முயற்சியின் காலத்தினை நீட்டிக் கொள்ளலாம் என்கின்றார். உயிர்ப்பு வளியை உள்ளே அடக்கும் அரிய முயற்சியானது இறைவனின் திருவருளின் துணையோடு இயற்றப்படும்போது சற்று எளிதில் கைக்கூடும் என்கின்றார் திருமூலர்.

நாம் உள்ளிழுக்கும் உயிர்ப்பு வளியானது இடப்பால் நாடி(இடைகலை), வலப்பால்நாடி(பிங்கலை) எனும் இரண்டு நாடிகளின் வழி இரண்டாய் இயங்கும் என்று குறிப்பிடுகின்றார். இடப்பால் நாடியாகிய இடைகலைநாடி, வலக்கால் பெருவிரலில் இருந்து தொடங்கி மேல் ஏறிப் படரும். வலப்பால்நாடி எனும் பிங்கலைநாடி இடக்கால் பெருவிரலில் இருந்து தொடங்கி மேல் ஏறிப் படரும். இவை இரண்டும் கொப்பூழில்(உந்தியில்) பிணைந்து இடப்பால்நாடி இடப்பக்கமாகவும் வலப்பால் நாடி வலப்பக்கமாகவும் மாறி, முதுகு, பிடர், தலை வழியாகச் சென்று இடப்பால் நாடி மூக்கின் இடத்துளையிலும் வலப்பால் நாடி வலத்துளையிலும் முடியும். மூக்கின் வழி நாம் உள்ளிழுக்கும் உயிர்ப்பு வளி மூக்கில் உள்ள இவ்விரு நாடிகளின் வழியே வந்து அந்த இரு நாடிகளும் பிணையும் இடமாகிய உந்தியில் வந்து நின்று, மீண்டும் அவை வந்த வழியே வெளிச்செல்லும். அவ்வாறு வெளிச்செல்லும் உயிர்ப்பு வளியினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதும் அதனை உள்ளே அடக்கும் முயற்சியுமே வளிநிலை என்கின்றார் திருமூலர்.

இவ்வாறு அடக்குதலை அதன் முறை அறிந்து செய்வதற்குத் திருவருளையும் சிவச்செறிவு ஆசான் அருளையும் பெறல் இன்றியமையாதது என்கின்றார் திருமூலர். உண்மையான, முறையறிந்த, சிவச்செறிவு ஆசான்களைக் கொண்டு முறையாக இப்பயிற்சியினைச் செய்யாவிட்டால் உடல் நலத்திற்கும் உயிருக்கும் ஊறு விளையும் என்றும் குறிப்பிடுவர். இவ்வாறு உயிர்ப்பு வளியை அடக்கத் தெரிந்தவர்க்கு உடம்பு ஒளிவிட்டு விளங்கும். தலை, முகம் முதலானவற்றில் உள்ள மயிர்கள் நரைக்காது கறுக்கும். மனம் அமைதி பெற்ற நிலையில் சிவபெருமான் அவர் உள்ளத்தை நீங்காது இருப்பான். இறப்பு, பிறப்பு என்ற நிலையற்று மோனநிலை எனப்படும் பேச்சு அறுதல் நிலையில் அமர்ந்து இன்ப நிலையை நுகரும் நிலையைப் பெற்றிருப்பர் என்கின்றார்.

வளிநிலையில் உயிர்ப்பு வளியினை அடக்கும் முறையினையும் திருமூலர் குறிப்பிடுகின்றார். வளிநிலை என்பது மூன்று நிலையினை உடையது என்கின்றார். நாம் உயிர்ப்பு வளியை உள்ளே இழுக்கின்ற செயலை ஏறுதல்(பூரகம்) என்று சொல்கின்றார். அதற்கு அளவு பதினாறு மாத்திரை. ‘சிவசிவ’ என்று ஒருமுறை கூறும் காலம் நான்கு மாத்திரை அளவு என்று கழகப் புலவர், சித்தாந்தப் பண்டிதர் ப.இராமநாதன் அவர்கள் குறிப்பிடுவார். இதனை இடது மூக்குத் துளையின் வழி இழுத்து இடப்பால் நாடி வழியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்கின்றார். இரண்டாவது வளிநிலையானது இடப்பால் நாடி வழியாகக் கொண்டு சென்ற உயிர்ப்பு வளியை உடலுக்கு உள்ளேயே அடக்கி நிறுத்துதலுக்கு உரிய ஆறுதல்(கும்பகம்) என்ற செயலைக் குறிப்பது என்கின்றார். குறித்த இடத்தில் நில்லாது ஓடுகின்ற உயிர்ப்பு வளியை அவ்வாறு ஓட விடாது தடுத்து நிறுத்துதலை இது குறிக்கும் என்கிறார். இதற்கு உயர்ந்த அளவு அறுபத்து நான்கு மாத்திரை என்கின்றார். இது பதினாறு முறை ‘சிவசிவ’ என்று கூறும் கால அளவை ஆகும். மூன்றாவது வளிநிலையானது உள்ளே நிறுத்திய உயிர்ப்பு வளியை வலப்பால் நாடி வழி வலமூக்கின் துளையின் வழி வெளியிடுதல்(இரேசகம்) எனும் செயல் என்கின்றார். இதற்கு உயர்ந்த அளவு முப்பதிரண்டு மாத்திரை அல்லது எட்டு முறை “சிவசிவ” என்று கூறும் கால அளவு என்கின்றார்.

இந்த ஏறுதல், ஆறுதல், ஊறுதலின் மாத்திரை அளவினை முறையாகக் கடைபிடிக்காது ஒன்றில் மாறுபாடு ஏற்பட்டாலும் வளிநிலை கைக்கூடாது என்கின்றார் திருமூலர். ‘ஓம்’ என்கின்ற ஓங்கார மந்திரத்தை ஒரு மாத்திரை என்று கொள்வர் என்பார் மகாவித்துவான் அருணைவடிவேலனார். மந்திரங்களைக் கணிக்கும் முறையை வாசகம், உபாஞ்சு, மானதம் என்று மூன்றாக வடமொழியில் குறிப்பிடுவர். வாசகம் என்பது தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்குமாறு மந்திரத்தை வெளிப்படக் கூறுதலாகும். உபாஞ்சு என்பது நாக்கு நகரும் அளவில் மந்திரத்தை மெல்ல உச்சரித்தல் அல்லது முணுமுணுத்தல் என்பதாகும். மானதம் என்பது மந்திரத்தை நாவால் கூறாது மனதால் நினைத்தல் என்பதாம். வளிநிலை இயற்றப்படும் போது மந்திரங்கள் கூறப்படல் இன்றியமையாதது என்று குறிப்பிடப்படுகின்றது.

இவ்வளிநிலைப் பயிற்சியைத் தக்காரின் துணையோடு முறையுடன் சிறுகச் சிறுகப் பயின்றால் உடல் தூய்மை பெற்று, ஆற்றல் மிகுந்து, நற்பண்புகள் உண்டாகும். ஆண்டுகள் பல சென்றாலும் உடல் முதுமை எய்தாமல் அழகுடனும் இளமையுடனும் உயிர் அறிவுத் தெளிவுடனும் விளங்கும். இது இறை உணர்வு பெறுவதற்கும் இறைவனின் திருவருளைப் பெறுவதற்கும் ஏதுவாய் அமையும் என்கின்றார் திருமூலர். எவ்வகையான இருக்கைகளைக் கொண்டு(ஆசனம்) வளிநிலை இயற்றினாலும் உயிர்ப்பு வளியை இடமூக்கு இடநாடி வழியாகவே உள் இழுத்தல் வேண்டும் என்கின்றார் திருமூலர். இவ்வாறு வளிநிலை கைக்கூடியவர்களுக்குச் சங்கு, இடி, சிலம்பு போன்ற பத்து வகையான ஒலிகள் உள்ளே கேட்கும் நிலைமை உண்டாகும் என்கின்றார். அட்டமா சித்திகள் எனப்படும் எட்டு பேறுகள் கிட்டினாலும் அத்தகைய பேறுகளை உண்மைச் சிவச் செறிவாளர்கள் கருதமாட்டார்கள் என்கின்றார்.

வளிநிலையில் உயிர்ப்பு வளியை அடக்கி ஆறுதல்(கும்பகம்) செய்யும் இடம் ஓமத்தானம் எனப்படும் நாபித்தானம் அல்லது உந்தி என்கின்றார். உயிர்ப்பு வளியை மூக்கு வழி வெளிப்படாதவாறு உள்ளே உந்தியில் அடக்கும்போது அது கழிவகற்றும் எருவாய் வழியாக வெளிப்பட முயலும். அவ்வாறு அதனைச் செல்லவிடாது தடுத்து நிறுத்தினால் (இயற்கையாக வெளியாகும் மலக்காற்று அல்ல) முதுகெலும்பின் அடியில் உள்ள சுழுமுனை எனும் நடுநாடியின் வழியில் அவ்வுயிர்ப்பு வளி செல்லத் தொடங்கும். இதனால் பல அரிய நன்மைகள் விளையும் என்கின்றார் திருமூலர். உள்ளிழுக்கும் உயிர்ப்பு வளியினை வீணடிக்காமல் முழுமையாகப் பயன்படுத்தி உடல் நலத்தையும் இளமையையும் நீண்ட வாழ்நாளையும் பெறுவதன் வழி பரம்பொருளைப் பெறும் வாய்ப்பினை இப்பிறவியிலேயே பெறுவோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!