100. அகத்தவம் எட்டில் நொசிப்பு

1267

அகத்தவம் எட்டில் எட்டாவது நிலையாக நிற்பது சமாதி என்ற நொசிப்பு ஆகும். யோகநெறி எனப்படும் அகத்தவத்தில் தீது அகற்றல் முதலாகக் கொண்ட ஏழு படிநிலைகளில் வழுவாமல் நின்றதன் விளைவாக வாய்ப்பது சமாதி எனும் நொசிப்பு என்கின்றார் திருமூலர். யோகநெறியின் எட்டாவது படிநிலையாகத் தோன்றும் இந்நொசிப்பு நிலை மட்டுமின்றி அட்டமாசித்திகள் எனப்படும் எண்பெரும் பேறுகளும் இடைநிலைப் பயன்களாக இடையே கிட்டும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவயோகம் அல்லது சிவச்செறிவு நெறியினை விடுத்த பிற யோக நெறியின் இறுதிநிலை சமாதி எனப்படுகின்றது. திருமூலர் குறிப்பிடும் சிவச்செறிவு எனும் சிவயோகமானது, யோகசமாதி முற்றியவர்க்கே சிவஅறிவு அல்லது சிவஞானம் கிட்டும் என்று குறிப்பிடுகின்றது.

நெற்றியில் தோன்றி, இடநாடி, வலநாடி எனப்படும் இடைகலை, பிங்கலை நாடிகளின் வழியாக இயல்பாக இறங்க முயலும் வெண்பாலை (விந்துவை) யோகப் பயிற்சியினால் அவ்வாறு இறங்க விடாமல் சுழுமுனைநாடி எனப்படும் நடுநாடியின் வழி இறங்க விட்டுப் புருவ நடுவில் கொண்டு வந்து நிறுத்துபவர்க்கும் மூலாதாரத்தில் உள்ள குண்டலி ஆற்றலை யோக முயற்சியால் புருவ நடுவிற்குக் கொண்டு வந்து நிறுத்துபவருக்கும் சமாதி என்ற நொசிப்பு நிலை தலைப்படும் என்கின்றார் திருமூலர். இவ்வாறு தலைப்படும் நிலையில் உயிரானது உடலுக்கு வெளியே உள்ள புறப்பொருள்களையும், தன்னையும் மறந்து, இடைவிடாது நினைத்தல் என்னும் தியானத்திலே வைத்து எண்ணப்படுகின்ற பொருளோடு ஒன்றிநிற்கும் என்கின்றார். தான் அற்ற நிலையில் உயிரானது, குண்டலியின் இறைவனை அறியும் ஆற்றலின் கூறான ‘வாக்கு’ என்பது அற்று, அல்லது பேச்சு அற்று நிற்கும் என்கின்றார். உரை அற்று அல்லது பேச்சு அற்று மெளனமாய் புறப்பொருள் பற்றுக்களையும் தான் என்ற உணர்வு அற்ற நிலையிலும் உயிர் நொசிப்பு நிலையை எய்தி இருக்கும் நிலைக்குத் தெய்வச் சேக்கிழார் பெரியபுராணத்தில் கட்டியங் கூறுவதனைக் கற்றறிந்தோர் குறிப்பிடுவர். திருப்புகலூரில் நாவுக்கரசு அடிகளின் உழவாரப் பணி செய்து கொண்டிருந்த போது கிடைத்தப் பொற்காசுகளைக் கற்கள் வேறு பொற்காசுகள் வேறு என்ற உணர்வின்றி அவற்றைச் சமமாகக் கண்டமையையும் அழகிய இளம் வானுலகப் பெண்கள் அடிகள் முன் ஆடல் பாடல் நிகழ்த்தியமையைக் கண்டு அவர் அகம் இளையாது இருந்தமையையும் குறிப்பிடுவர்.

புறப் பொருள்கள் மீதும் தன் மீதும் உள்ள பற்றினை உணர்த்தி நிற்கின்ற மனம் என்று மாள்கின்றதோ அப்பொழுதுதான் பிராணவாயு எனப்படும் உயிர்ப்புக் காற்றின் இயக்கமும் அற்றுப் போகும் என்கின்றார் திருமூலர். மேற்கூறிய இரண்டு பற்றுக்களையும் உயிர்ப்புக்காற்றின் இயக்கத்தையும் விட்டு நீங்கிய மனம் உடையவருக்கே இடைவிடாது நினைத்தல் எனும் தியானத்தில் எண்ணப்படும் பொருளைப் பற்றி இன்புறுதலுக்குத் தலைப்படும் நிலை ஏற்படும். அத்தலைப்பாட்டு நிலையில் உயிரின் சுட்டி அறிகின்ற, அதுவதுவாய் மட்டும் அறிகின்ற சிற்றறிவு அல்லது சுட்டறிவு (ஏகதேச ஞானம்) நீங்கி, அகண்டிதமாய் அறியும் அறிவு அல்லது பேரறிவு (வியாபக ஞானம்) திருவருளால் தோன்றி, அடைதற்குரிய சிவம் அழகியதாய் தோன்ற தலைப்படும். இதுவே சிவஅறிவு (பரஞானம்) எனப்படுகின்றது என்பார் திருமூலர்.

யோகநெறியின் இறுதிநிலையாகச் சொல்லப்படும் சமாதி என்ற நொசிப்பு நிலையில் மனம், வாக்கு அடங்கிய நிலையோடு முற்றுப் பெற்றுவிடாமல் அதற்கு மேல்நிலையாகிய சிவஅறிவு பெறுகின்ற அறிவுநிலையினையே அல்லது ஞானநிலையினையே உண்மையானச் சிவச்செறிவு அல்லது சிவயோகம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். ஐம்புலன்களின் விருப்பினை முற்றாக விட்டு விலகி மனம் முற்றாக ஒடுங்கி, உயிர்ப்புக் காற்றும் அசைவற்று நிற்கின்ற இந்நொசிப்பு நிலையில் இறவாமைக்கு வழிகாட்டும் பொருளான சிவத்தைக் காணும் நிலை ஏற்படும் என்கின்றார் திருமூலர். இதனால் சமாதி எனும் நொசிப்பு கூடியவர்கள் யோகப் பயிற்சிகளில் மட்டும் சிறந்தவர்களாய் இருப்பதோடு மட்டுமல்லாமல் அன்புடையவராதலும் உலகப்பற்றை விடுதலும் வேண்டும் என்று குறிப்பிடுவர். சமாதி எனும் நொசிப்பு தலைப்படுகின்றவர்களுக்குத் தியானம் என்ற இடைவிடாது நினைதல் நிலையில் முதலில் மின்னல், விண்மீன், விளக்கு போன்ற வடிவங்கள் தோன்றும் என்கின்றார் திருமூலர். இறுதியாக இறைவன் பேரொளி வடிவில் தோன்றுதல் சமாதி அல்லது நொசிப்பு கைகூடுதல் என்றும் அது தோன்றிய உடனேயே அதில் ஒன்றி இருத்தலே சமாதியில் கூடிநிற்றல் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சமாதி எனும் நொசிப்பு நிலையில் மனமானது மூலாதாரம் முதலிய நிலைக்களங்களில் இறைவனைப் பாவனையால் வைத்து எண்ணும் நிலைகளை விடுத்து, அவ்வாறு எண்ணியதால் மூண்டு எழுந்த கனலை மட்டும் துணையாகப் பற்றிப் புருவ நடுவிற் சென்று அங்கு சிவனது பேரொளித் தோற்றத்தை மட்டுமே எதிர்நோக்கி அதனுள் ஒன்றும் ஆவல் மட்டும் மிகுதியாக இருந்து, அப்பேரொளி தோன்றிய பொது அதனையே தனக்கு முழுமையான வடிவமாகக் கொண்டு அதனில் புகுந்து ஒடுங்கி நிற்கும் நிலை ஏற்படும் என்பதனைக், “கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று, சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளியிப், பொற்பனை நாடில் புணர்மதி யோடுற்றுத், தற்பர மாகத் தகுந்தண் சமாதியே” என்று குறிப்பிடுவார் திருமூலர். புருவ நடுவில் சிவப்பேரொளியை எதிர்நோக்கி அசைவற்று இருக்க வல்லவர்க்கு, அச்சிவப்பேரொளி தானே வந்து தலைப்படும். அது சிவச்செறிவாளர் அல்லது சிவயோகியரின் முயற்சியால் பெறப்பெறுவது அன்று. இதனையே, “ சித்தமலம் அறுவித்து சிவமாக்கி எனை ஆண்ட, அத்தன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே” என்று மணிவாசகர் தாம் அருளிய அச்சோ பதிகத்தில் குறிப்பிடுவார். சமாதி என்ற நொசிப்பு நிலைக்கும் மேலான சிவயோக அல்லது சிவச் செறிவின் முடிவாகச் சிவநொசிப்பால் அருள் வீழ்ச்சி முதிர்தல் கூறப்படுகின்றது.

சிவநொசிப்பு அல்லது சிவசமாதியில் அழுந்தி நிற்கும் உயிர்கள் சிவம் அவனது திருவருள் ஆற்றல் தன்மைகளைப் பெற்று நிற்கும். இதனையே சிவமாம் தன்மை பெறல் என்பர். இத்தகைய யோகீசுரனை அல்லது சிவமாம் தன்மை பெற்ற சிவச்செறிவாளரை நான்முகன் திருமால் போன்றோரும் வணங்குவர் என்கின்றார் திருமூலர். சிவன் செய்யும் செயல் எல்லாம் இத்தகையச் சிவச்செறிவாளர்கள் செய்ய வல்லவராயினும் இவர்கள் தங்களைச் சிவமாகக் கருதமாட்டாதவர்கள் என்கின்றார் திருமூலர். சிவசமாதி அல்லது சிவநொசிப்பு அல்லது வெறும் யோக சமாதி கைவரப்பெற்றவர்களுக்கு நிட்டை எனும் அறிவு நிலை கூடி வருதலும் அறுபத்து நான்கு பேறுகள் (அறுபத்து நான்கு சித்திகள்) மட்டுமே கிட்டும் என்கின்றார் திருமூலர். சிவநொசிப்பாளர்களான சிவசமாதி கூடியவர்களுக்கு யோகசமாதிக்கு மேம்பட்ட நிலையாகிய உயிர் சிவமாகவே நிற்கும் நிலை ஏற்படும் என்கின்றார் திருமூலர். இச்சிவநொசிப்பாளர் இறைவன் அருள்வழியே எச்செயலையும் செய்வதும் இவர்களின் அறிவு சிவ அறிவாகவே விளங்குவதாலும் இவர்கள் யோகசமாதிக்கு மேம்பட்டவர்கள் என்பதனைச், “சமாதிசெய்வார்க்குத் தகும்பல யோகம், சமாதிகள் வேண்டா இறையுட நேகில், சமாதிதா நில்லை தனவ நாகில், சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே” என்பார்.

சிவச்செறிவு அல்லது சிவயோகம் நொசிப்பு நிலைக்கு மேற்சென்று உயிர் சிவஅறிவு பெறும் ஞானநிலையைச் சுட்டி நிற்கிறது என்கிறார் திருமூலர். இதனாலேயே சித்தாந்த மெய்கண்ட நூல்கள் இறைவனைப் பெறும் படிநிலைகளை சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை கிரியை, யோகம், ஞானம்) என்று குறிப்பிடுகின்றன. யோகம் அல்லது செறிவு முதிர்ந்த நிலைக்கு மேற்பட்ட நிலையைச் சிவச்செறிவு பெற்ற சிவநொசிப்பாய் குறிப்பிடப்படுகின்றது. சிவனின் அருள் வீழ்ச்சி முதிர்ந்து சிவ அறிவாய் தலைப்படும் இந்நிலையில் உயிர் இறைவனுடன் ஏகி நிற்கும் என்கிறார் திருமூலர். தன் செயலற்று இறைவனின் அருள்வழியே செயல்படும் என்கின்றார். இதனையே, “என்செயல் ஆவது யாதும் ஒன்றும் இல்லை, தெய்வமே நின் செயலே உணரப்பெற்றேன்” என்று பட்டினத்து அடிகள் குறிப்பிட்டதும் இந்நிலையே. தான் அவனாதல் எனும் நிலையை உயிரானது பெற்று இறைவனது தன் வயம் உடைமை, தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசம் நீங்கினமை, பேரருள் உடைமை, அளவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை என்ற இறைவனின் எட்டு குனங்களின் தன்மையைப் பெற்று இறைவனின் திருவருள் இன்பத்தில் திளைத்து நிற்கும் என்கின்றார் திருமூலர். இவ்வழியை அறிந்தவர்க்கு இன்பமே! எந்நாளும் துன்பமில்லை என்கிறார் திருமூலர்.