அகத்தவம் எனப்படும் சிவச் செறிவின் எட்டுப் படிநிலைகளில் தாரணை எனப்படும் பொறைநிலையை அடுத்து வருவது தியானம் எனப்படும் இடைவிடாது நினைதல் என்பதாகும். பொறை நிலையில் உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் எனப்படும் ஆறு நிலைக்களங்களுக்கு உயிர்ப்புக் காற்றின் துணையோடு மனதைச் செலுத்தியபின் அந்நிலைக்களங்களில் மனதை நிலை நிறுத்தி இறைவனை இடைவிடாமல் நினைத்தலே வடமொழியில் தியானம் எனப்படுகின்றது. சிவயோகம் எனப்படும் சிவச் செறிவில், இறை அறிவைப் பெறுகின்ற நிலையே இப்படிநிலையில் குறிப்பிடப்படுகின்றது. இதனை யோகத்தில் ஞானம் என்று குறிப்பிடுவர். இந்நிலையில் உயிராகப்பட்டது தத்துவ சுத்தி, ஆன்மசுத்தி என்று வடமொழியில் குறிக்கப்படும் இருநிலையை அடைய வேண்டும் என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.
தத்துவ சுத்தி எனப்படுவது உயிரானது பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு, பிரகிருதி ஒன்று என்ற பதினைந்தையும் சார்ந்து நிற்கின்ற நிலையை விடுதல் எனப்படும். அதாவது நிலம், நீர், தீ, வளி, வெளி என்ற ஐந்து பூதங்களால் ஆன இவ்வுடம்பு நான் அல்ல என்று அறிந்து பின்பு அதனை உணர்ந்து அதன் சார்பை விட்டு நீங்க வேண்டும் என்பர். தன்மாத்திரை ஐந்தின் சார்பு நீங்கல் எனப்படுவது மேற்கூறிய ஐந்து பூதங்கள் தரும் உணர்வுகளான நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஓசை என்ற ஐந்தையும் அறிவது உடம்பு அல்ல! மாறாக உயிரே என்பதனை அறிந்து, பின் உணர்ந்து அவற்றின் சார்பு நீங்கல் என்பதாகும். மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு அந்தக்கரணங்கள் உடலில் உள்ள புலன்கள் வழிச் செல்லாமல் இறைஅறிவைப் பெற முயலும் உயிருக்குத் துணையாய் இருப்பதே அந்தக்கரண சுத்தி எனப்படுகின்றது. மேற்கூறிய எல்லாமே மாயை எனும் பொருளால் ஆகியிருக்கின்றன என்றும் அவற்றின் சார்பை விட வேண்டும் என்றும் உணர்ந்து தெளிதல் பிரகிருதி சுத்தி எனப்படுகிறது.
ஆன்ம சுத்தி எனப்படுவது உயிர் தன் சார்பை விட்டு நீங்கல் எனப்படுகின்றது. இதில் உயிரானது தான் அறிவுடைப் பொருள், ஆனால் இறைவன் பேரறிவிற்கு முன் சிற்றறிவே உடைய பொருள். இறைவனிடத்தில் தாம் சேர முடியா வண்ணம் ஆணவம் என்ற மறைப்பு தன்னைப் பற்றிக் கொண்டிருக்கின்றது. இறைவனின் திருவருள் இன்றி என்னால் அவனை அடைய இயலாது என்று அறிந்து, பின் அதனை உணர்ந்து ‘யான் எனது’ என்ற உயிர்ச் சார்பை நீங்கி இறைவனை மட்டும் அறிதல் எனும் நிலைக்குத் தலைபடுதல் உயிர் சுத்தி எனப்படுகின்றது. இந்நிலையில் இறைவனை இடைவிடாது நினைத்தலுக்கான படிநிலை சிவ செறிவில் ஞானம் அல்லது அறிவு எனப்படுகின்றது. உயிரானது தத்துவ சுத்தியும் ஆன்ம சுத்தியும் பெற்று தன்முனைப்பு அற்று நிற்கின்ற நிலையினைச் சாதன யோகமாகவே முடியும் என்பர். இந்நிலைக்குமேல் ஒளிவடிவாகிய சத்தியையும் அதற்குமேல் அருவாய் நிற்கும் சிவத்தையும் இடைவிடாது நினைத்தலே சாத்தியயோகம் அல்லது சிவயோகம் எனப்படுகின்றது. ஒளிவடிவிற்கு மேலான அருவமாய் சிவத்தை நிராதாரம் எனும் நிலைக்களம் அற்ற நிலையாகிய உச்சியில் அருவமாக நினைத்தலே சிவத்தியானம் ஆகும். அதுவே பரத்தியானம் எனப்படுகின்றது.
உலகில் அழியக்கூடிய பொருளாகிய உடம்பை உணர்கின்றார்களே தவிர, அதனோடு பிரிப்பில்லாமல் சார்ந்து நிற்கின்ற அழிவற்றப் பொருளாகிய உயிரை அறிவது இல்லை என்கின்றார் திருமூலர். ஒரு சிலர் உயிரை அறிந்தாலும் அவ்வுயிருக்கு உயிராய் நிற்கின்ற சிவனை அறிந்து இருப்பதில்லை என்கின்றார். ஒருசிலர் உயிருக்கு உயிராய்ச் சிவன் எனும் ஒருவன் இருக்கின்றான் என்று உணர்ந்தாலும் அவன் ஆஞ்ஞை எனும் புருவநடுவில் வைத்து இடைவிடாது நினைத்தால் காணக்கூடியவன் என்று உணர முடியாதவர்களாய் இருக்கின்றார்கள் என்கின்றார். இன்னும் ஒரு சிலரோ மேற்கூறியவாறு சிவன் காணப்படக் கூடியவன் என்று உணர்ந்தும் ஒரு நொடி நேரமாயினும் அவனை இடைவிடாது எண்ணுவதில் தலைப்படாமலேயே இருந்து ஒழிவார்கள் என்பதனை, “ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை, ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை, ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை, ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே” என்று குறிப்பிடுவார்.
புறத்தில் உள்ளவர்களால் பார்க்க இயலாத, திறக்காமல் மூடி இருக்கின்ற புருவ நடுவாகிய நெற்றிக் கண்ணில் பொறைநிலை முயற்சியால் மின்னல் போன்று தோன்றிய இறை ஒளியை இடைவிடாது நினைத்துப் பின் நிரம்பக் குறைவின்றிப் பார்த்து அதனோடு உணர்வு ஒன்றி இருக்குமானால் அந்த இறை ஒளியை இடைவிடாது பார்த்திருக்கலாம் என்கின்றார் திருமூலர். கண், காது, மூக்கு, வாய்(சுவை), மெய் என்ற அறி கருவிகள் மூலமும் கை, கால், வாய்(பேச்சு), எருவாய், கருவாய் என்ற செயல் கருவிகள் மூலமும் மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் உட்கரணங்கள் மூலமும் உயிரானது அறிவு விளக்கம் பெறுகின்றது என்று குறிப்பிட்டாலும் அவ்வகையால் உயிர்களை அறிவுப் பெறச் செய்வது திருவருளே ஆகும். அத்திருவருளைக் காண முயலும் முயற்சியே சிவச் செறிவில் இடைவிடாது நினைத்தல் எனும் படி நிலையாகும். இது உயிர் பெறத் தக்க பேறு என்பர். இப்பேற்றினை அடைவதற்கு வழி தெரியாது தடுமாறுகின்ற உயிர்க்கு வளிநிலை (பிராணாயாமம்) பயிற்சியின் வழி கிடைக்கும் குண்டலி சத்தியே துணை நிற்கின்றது. வாயின் உள்ளே உள்ள உள் நாக்கு எனப்படும் அண்ணாக்கினை அடுத்துள்ள துளை வழி உச்சியை அடைகின்ற உயிர்ப்புக் காற்று அவ்வுச்சிவழியாகப் புருவ நடுவை அடையும். இவ்வுயிர்ப்புக் காற்று புருவ நடுவில் உள்ள சுழுமுனை நாடியைத் தாக்குதலால், புருவ நடுவில் மின்னல் போல இறை ஒளியைக் காணும் நுகர்ச்சி ஏற்படும். இவ்வொளியை இடைவிடாது நினைத்தால் அவ்விறை ஒளி மறைதல் இல்லாமல் நின்று பயன் தரும் என்கின்றார் திருமூலர்.
கண்களை மூடி இறைவனைப் புருவ நடுவில் ஒளி வடிவில் இடைவிடாது நினைப்பவர்களைப் பார்பதற்கு உறங்குவது போன்று தோன்றிடினும் அவர்கள் கொள்வது ‘அறிதுயில்’ அல்லது யோக நித்திரை என்று குறிப்பிடுவர். இவர்களுக்குக் கருவி கரணங்கள் செயல்படாது நிற்குமே தவிர அவை மடிவதில்லை. பலர் பல காலம் யோகம் எனும் செறிவு முயற்சியில் ஈடுபடினும் இறைவனை இடைவிடாது நினைக்கும் தியான நிலையை அடைய முயல்கின்றவர் சிலரே என்கின்றார் திருமூலர். சிவனை இடைவிடாது நினைக்கும் நிலையை அடைந்தால், சிவன், கண்ணாடியுள்ளே இருக்கின்ற பொருள் தெளிவாய் விளங்குதல் போல, சிவன் உயிருக்கு உயிராய் நிற்கின்ற நிலை தெளிவுற விளங்கும் என்கின்றார் திருமூலர்.
ஒருவருக்குப் புருவ நடுவில் சிவனை இடைவிடாது நினைக்கும் முயற்சி வெற்றி பெறுமானால் அவருக்கு துன்பம், இறப்பு, கவலை, யான் எனது எனும் பற்றும் தன்முனைப்பும் இல்லாது ஒழியும் என்கின்றார் திருமூலர். துன்பம், இறப்பு, கவலை, பற்று, முனைப்பு என்பவற்றின் காரணமாக உலக மயமான தேடல் முயற்சிகள் அற்று தன் செயலாவது யாது ஒன்றும் இல்லை எல்லாம் அவன் செயலாகவே நடக்கின்றது என்று மாறி சிவமாகவே இருப்பர் என்கின்றார். இறைவனைப் புருவ நடுவில் இடைவிடாது நினைக்கும் போது மணி ஓசை, கடல் ஓசை, யானைப் பிளிறல் ஓசை போன்ற பத்து ஓசைகள் கேட்கும் எனினும் அதனைப் பொருட்படுத்தாது சிவனையே இடைவிடாது நினைத்து உணர்பவருக்கு இறைவனின் இயல்பும் இறைவனின் உணர்வைத் தம்மிடத்தே ஈர்த்து அடக்கி இறைவனின் உணர்வாகவே நிற்கின்ற இயல்பும் வானவர் கூட்டத்தையும் இதர சிவ உலகப் பொருள்களைக் காணும் இயல்பும் ஏற்படும் என்கின்றார். இறைவனின் திருவருளான சத்தியும் சிவமும் ஓசை நிலையை கடந்து நிற்பதனால் இறைவனை இடைவிடாது நினைக்கும் இந்நிலையில் கேட்கும் பத்து ஓசைகளும் மாண்ட நிலையே சிவச் செறிவில் இறைவனைக் காணும் நிலை என்கின்றார் திருமூலர்.
உடலில் உள்ள ஆறு நிலைக்களங்களை அடிப்படையாகக் கொண்டு உடலை மூன்று மண்டலங்களாகப் பிரிப்பர். மூலாதாரம், சுவாதிட்டானம் எனப்படும் அதன் இடம் ஆகிய இரண்டும் தீ மண்டலம் என்றும் கொப்பூழ், இருதயம், கண்டம் ஆகிய மூனறும் கதிரவன் மண்டலம் என்றும் புருவ நடு, உச்சி ஆகியவை சந்திர மண்டலம் என்றும் குறிப்பிடப்படும். இவ்வனைத்து மண்டலங்களிலும் இடைவிடாது வைத்து எண்ணப்பட வேண்டியவர் முழுமுதலான சிவனே என்று உணர்பவர்க்கே சிவன் ஒளியாகத் தோன்றி அருள் செய்வான். இதுவே இறப்பில் தவம் அல்லது சிவச் செறிவு எனப்படும். எனவே இறைவனை இடைவிடாது நினைத்தல் என்கின்ற உயர்ந்த நிலையை உயிர் அடைவதே தியானம் அல்லது இடைவிடாது நினைதல் எனப்படுகின்றது. இன்பமே எந்நாளும் துன்பமில்லை!