4. கடவுளே நான்மறைகளை உணர்த்தினான்

1655

சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவத்தின் பிழிவாக நிற்பது திருமந்திரம். பன்னிரண்டு திருமுறைகளான வழிபாட்டு மந்திரங்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தாலும் மெய்கண்ட நூலாகவும் விளங்குவது திருமந்திரம். அத்தகைய திருமந்திரம் முழுமுதல் கடவுள் ஒருவனே! அவனது திருவருளே அவனிடமிருந்து வெளிப்பட்டு அறக்கருணை மறக்கருணை என்றாகி நிற்கின்றது என்கிறது. தானும் தன் திருவருளுமாய் இரண்டாய் நின்ற இறைவனே தனது அருள் ஆற்றலின் இயல்பால் முத்திறப்படுகின்றான் என்கிறது. அன்பு, அறிவு, ஆற்றல் என்று முத்திறப்படும் இறைவனின் அருள் ஆற்றலே நமக்கு அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களை உணர்த்துகின்றது என்கிறது.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப்பொருள்களையே தமிழ் மந்திரங்களான திருமுறைகள் நான்மறை என்று குறிப்பிடுகின்றன. இது பற்றியே திருவள்ளுவ நாயனாரும் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலைக் கூறி வீடு என்னும் உறுதிப்பொருளைச் சொல்லாமல் சொல்லிச் சென்றார். நான்கு உறுதிப்பொருள்களான அறம், பொருள், இன்பம், வீடு என்பது தமிழர்களுக்கே உரிய சிந்தனை. மாந்தர் பின்பற்றி உய்த்து உணர்தற்கு இயற்றப்படும் நூல்களின் சீர்மையை இந்நான்கு உறுதிப் பொருள்களின் வெளிப்பாட்டு நிலையை அடிப்படையாக வைத்தே சீர்தூக்கிப் பார்த்தனர். வடமொழி வேதத்தின் தாக்கம் தமிழர் இறைநெறியில் நுழந்த பின்பு நான்கு மறை என்ற வழக்கு, இருக்கு, யசூர்,சாமம், அதர்வனம் என்ற நான்கு வடமொழி வேதங்களைக் குறிப்பதாக விளக்கம் செய்யப்பெற்று வேரூன்றி நிற்கிறது என்று தருமை ஆதீனப் புலவர், சித்தாந்தக்கலைமணி, மகாவித்துவான் முனைவர் சி. அருணைவடிவேல் அவர்கள் குறிப்பிடுவார்.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள்கள் நான்கினையும் சிவன் கல் ஆல மரத்தின் நிழலில் எழுந்து அருளியிருந்து, சனகர், சனாதனர், சனந்தனர்,சனற்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு கூறியதாய்த் திருமந்திரம் குறிப்பிடுகின்றது. இறைவன் கல் ஆல மரத்தின் நிழலில் இருந்து கற்பித்த செய்தியும், அறம், பொருள், இன்பம், வீடு என்ற கொள்கையும் இருக்கு முதலிய ஆரிய நால் வேதங்களில் ஓரிடத்திலும் சொல்லப்படாமையால், நான்கு மறைகளுக்கும் ஆரிய வேதங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பார் மகாவித்துவான் முனைவர் சி. அருணைவடிவேல் அவர்கள்.

திருமுறைகளில் சொல்லப்பட்டிருக்கின்ற நான்மறைகள் மேற்கூறிய நான்கு உறுதிப்பொருள்களைக் கொண்ட தமிழால் ஆகியவை என்கிறார். இவை தமிழில் சிறப்புற்றிருந்து பின்பு மறைந்து போயிருக்க வேண்டும் என்கிறார். ஆராய்ச்சியாளர் கா. சுப்ரமணியபிள்ளை அவர்களின், “திருநான்மறை விளக்கம்” எனும் நூலில், ஔவையார் இயற்றிய நீதி நூலில், “நல்வழி..” எனத்தொடங்கும் வெண்பாவில், “தேவர் குறளும், மூவர் தமிழும், கோவைத் திருவாசகமும், திருநான்மறை முடிவும், முனி மொழியும் ஒரு வாசகம் என உணர்” என்று இயற்றியுள்ள பாடலில் இடம் பெற்றிருக்கின்ற நூல்கள் யாவும் தமிழ் நூல்களாய் இருத்தலின், நான்மறை எனப்படுவதும் தமிழ்மொழி நூலே என்று கட்டியங்கூறுகின்றார்.

இறைவனே நமக்கு அறத்தினை அடிப்படையாகக் கொண்டு அருள் புரிகின்றான் என்பதனைத் திருமூலர் உணர்த்துகின்றார். இல்லறவியல் ஒழுக்கங்களையும் துறவறவியல் ஒழுக்கங்களையும் இறைவனே நமக்கு அறிவித்திருக்கின்றான். நல்வினைத் தீவினைப் பயனை அறிவித்து, இறைவனே அவற்றைக் கூட்டுவிக்கின்றான் என்கிறார் திருமூலர். அடக்கம், அரண், அவா அறுத்தல், அழுக்காறாமை, இல்வாழ்க்கை, இறைமாட்சி, ஈகை, இன்னா செய்யாமை, ஊழ் போன்றவற்றை இறைவனே திருவள்ளுவர், திருமூலர், நாயன்மார்கள் போன்றோரின் மூலமாகவும் தானேயுமாகவும் உணர்த்தியிருக்கின்றான் என்கிறார். துறவு நிலை வாழ்வினையும் அதன் சிறப்பினையும் அதில் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களையும் இறைவனே துறவு கோலத்திலும் ஆசான் வடிவிலும் அடியார்கள் மூலமும் உணர்த்தியதைக் குறிப்பிடுகின்றார்.

திருவள்ளுவர் பொருட்பாலில் குறிப்பிட்டுள்ள அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் போன்றவற்றைத் தெய்வச் சேக்கிழாருக்கு உணர்த்தி, அறுபத்து மூன்று நாயன்மார்கள் வாழ்வின் வழி வெளிப்பட்டதனைப் பெரியபுராணத்தின் வழி வெளிக்கொணரச் செய்தார் என்று திருமந்திரம் குறிப்பால் உணர்த்துகிறது.

இறைவனே இன்பத்திற்குரிய களவியல் வாழ்வினையும் கற்பியல் வாழ்வினையும் வாழ நமக்கு வழி வகுத்தான் என திருமந்திரம் குறிப்பிடுகின்றது. காதல் வாழ்விலும் திருமணம் புரிந்து வாழ்கின்ற இல்லற வாழ்விலும் அவை அவற்றிற்கு உரிய கடமை தவறாது, இறைவனை மறவாது, வாழ்வின் குறிக்கோளைத் தவறாது பின்பற்றிய நாயன்மார்களை இறைவனே நமக்கு அறிமுகப்படுத்தினான் என்கிறார் திருமூலர். அறம், பொருள், இன்பம் என்று வாழ்வு நடாத்திய நல்லடியார்கள் எவ்வாறு வீடு பேறு அடைந்தார்கள் என்பதனை, இல்லற நெறியில் நின்ற சுந்தரர் அடிகள் போன்றோரையும் துறவற நெறியில் நின்ற திருநாவுக்கரசு அடிகள் போன்றோரையும் இறைவனே நமக்கு வாழ்ந்து காட்டிய முன்னோடிகளாக அடையாளம் காட்டினான் என்பார் திருமூலர். எனவேதான் மறைநான்கு ஆனான் என்று திருமந்திரம் குறிப்பிடுகின்றது.