விநாயகர்

2460

விநாயகர் யார் என்று கேட்டால் நம்மில் பலர் அவர் பரம்பொருளான சிவபெருமானின்    மூத்த மகன் என்பர். முருகன் யார் என்று கேட்டால் அப்பரம்பொருளின் அலுபுஐ சிவபெருமானின் இரண்டாவது  மகன் என்றும் விநாயகரின் தம்பி என்றும் கூறுவர். அம்பாளோ இவ்விருவருக்கும் தாயென்றும்  பரம்பொருளான சிவபெருமானின் மனைவியென்றும் கூறுவர். அப்படியென்றால் பரம்பொருளான சிவபெருமான் சிவ உலகத்தில் மனைவி மக்கள் என்று இல்லற வாழ்வு நடத்துவது போன்று நமக்குத் தோன்றுகிறது. அப்படித் தோன்றினால் நமக்கு எத்தனைக் கடவுளர் உள்ளனர் என்ற கேள்வி எழும். திருமூலர் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறியது பொய்த்துவிடும். அப்படியென்றால் இக்கருத்து நிலவுவதின் அடிப்படைதான் என்ன என்பதை ஆராய்வோம்.

இறைவனை அவர் சிறப்பு நிலையில் சிவம் என்கிறோம். அதாவது சிறப்பு என்ற சொல்லிலிருந்து ‘சி’ என்ற எழுத்தையும் வனப்பு என்ற  சொல்லிலிருந்து ‘வ’ என்ற எழுத்தையும் எடுத்துக் கூட்டி ‘சிவம்’ என்று சைவர்கள் குறிப்பிடுவோம். இறைவனுடைய சிறப்பு நிலை என்பது இறைவன் பெயரோ, அடையாளமோ, வடிவமோ தாங்கி வராமல் தன் திருவருளை உள்ளே அடக்கி உண்மை, அறிவு, இன்பமாய் இருக்கின்ற நிலையைக் குறிப்பது. இதையே மணிவாசகப் பெருமான், ‘ஹ்ருருவம் ஹ்ர்நாமம் என்று ஒன்றும் இல்லார்க்கு’ என்று திருவாசகத்தில் குறிப்பிடுவார்.

இப்படி வடிவமோ, பெயரோ, அடையாளமோ இல்லாத இறைவன் உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக, அவை மேல்நிலை அடைவதற்காக அருவம், அருவுருவம், உருவம் என்று மூன்று  நிலைகளில் பொதுநிலைக்கு இறங்கி வருவதாக சைவம் கூறும். இப்படி வருகின்ற வடிவம் தாங்கிய உருவ நிலைகளில்தாம் நாம் இறைவனை அல்லது சிவமாகிய அப்பரம் பொருளை விநாயகர், முருகன், அம்பாள் என்றெல்லாம் அழைக்கிறோம். அவ்வகையில் விநாயகர் என்கின்ற வடிவம் என்ன என்பதை இனிக் காண்போம்.

பெயரோ, அடையாளமோ, வடிவமோ இல்லாத சிவப்பரம் பொருள் உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாகப் பொது நிலைக்கு வருகையில் தாங்கிய முதல் வடிவம் ஓசை வடிவம் அல்லது நாத வடிவம் என்கிறோம். இதனையே அருணகிரிநாதப் பெருமான் ‘நாத விந்து கலை ஆதி  நமோ நம’ என்று பாடுவார். நாதம் என்பது ஓசையைக் குறிக்கும். இதனையே பிரணவம் அல்லது ‘ஓம்’ என்கிறோம். ‘ஓம்’ என்ற மந்திரத்தில் ‘அ+உ+ம்’ என்கின்ற மூன்று எழுத்துக்கள் அடங்கியுள்ளன. இவை சிவப்பரம்பொருளின் அருளான பிரமன், திருமால், உருத்திரன், என்கின்ற கூறுகளை உணர்த்தி நிற்கின்றன.

சிவப்பரம்பொருளான இறைவன் முதன்முதலில் ஓசை வடிவமான பிரணவமாகத் தோன்றவே பிரணவமே உலகத் தோன்றுதலுக்கு அடிப்படை என்று கூறுவர். ‘ஓம்’ என்கின்ற பிரணவத்தின் மறுவடிவமே விநாயகர் என்று கூறுவர். ‘வி’ என்றால் உலகம். ‘நாயகன்’ என்றால் தலைவன். உலகத்திற்கு முதலில் தோன்றிய தலைவன் என்று விநாயகரை இதனாலேயே குறிப்பிடுகின்றோம். எனவே விநாயகரும் சிவப்பரம்பொருளும் வேறு அல்லது தந்தையும் மகனும் என்கின்ற தவறான புரிந்துணர்வுகளை நாம் நீக்கிக் கொள்ள வேண்டும். உண்மை, அறிவு, இன்பமாய் (சத்து, சித்து, ஆனந்தம்) இருக்கின்ற சிவப்பரம்பொருளே ஓசை வடிவமாக வருகின்ற போது விநாயகராக வருகின்றது என்று சைவர்கள் உணர்வார்கள்.

இப்படிச் சிவம் வருகின்ற விதத்தைப் பாமர மக்களும் உணர வேண்டும் என்பதற்காக நம் தமிழ்ச் சான்றோர் புராணச் செய்திகளின் வழி இவற்றைத் தெளிவுப்படுத்தினர். சைவப் புராணங்களில் ஒன்றான கச்சியப்பரின் கந்தபுராணத்தில் விநாயர் தோன்றியது குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு பூங்காவில் இறைவனும் இறைவியும் (இறைவனும் அவர் திருவருளும்) இருக்க, ‘ஓம்’ என்ற பிரணவத்தை இறைவன் தன் திருவருளைச் செலுத்திப் பார்க்க அங்கிருந்து விநாயகன் தோன்றியதாகக் கூறப்பட்டுள்ளது.

அதோடு யானைமுக அசுரன் ஒருவன் சிவனடியார்களுக்குத் துன்பம் செய்து வந்தான் எனவும் அவன் முன்பு சிவனை வேண்டி தவம் இயற்றித்  தேவர், மனிதன், அசுரன், பூத கணங்கள், விலங்குகள் மற்றும் எந்த ஆயுதத்தினாலும் தனக்கு இறப்பு வரக்கூடாது என்று அருள்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வசுரன் சிவனடியார்க¨ளைத் துன்புறுத்தவே அவர்கள் பரம்பொருளான அச்சிவத்தின் திருவருளை நாடினர் என்றும் கூறுகிறது. இச்சூழலிலேயே தன் அடியார்களின் துன்பத்தைப் போக்குவதற்காக இறைவன் விநாயகரை ‘ஓம்’ என்கின்ற வடிவாய் அருளினார் என்று அறியக்கிடக்கின்றது.

அப்படித் தோன்றிய விநாயகரின் வடிவம் யானைமுக அசுரனை வெல்லக்கூடியதாக, அவன் பெற்ற அருட்சக்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாக, குறுந்தாட் பூத கால்கள், அசுரர்களின் பானை வயிறு, தேவர்களின் மார்பு,  மனிதர்களின் தோள்கள், யானையின் முகம் என்று அமைந்த வடிவாய் இறைவன் தோற்றுவித்தார். அவ்வசுரன் எந்த ஆயுதத்தினாலேயும் வெல்லமுடியாதவன் என்பதினாலே அவனை விநாயகர் இறுதியில் தம் தந்தத்தினால் வெல்வதாய் கந்த புராணத்தில் வருகிறது. இதையே திருமுறையில் தமிழ்ஞானசம்பந்தர், ‘தனதடி வழிபடும் அவரிடர் கடி கணபதி வர அருளினன், மிகுகொடை வடிவினர் பயில்வமு வலமுறை இறையே’ என்று பாடியுள்ளார். எனவே தன்னை வழிபடுகின்ற அடியார்களின் துன்பத்தைப் போக்குவதற்காக, வலிவலம் என்கின்ற கோயிலிலுள்ள இறைவன் தன் திருவருளையே ஓசை வடிவில் விநாயகராக அருளினர் என்று புலப்படுகிறது.

நம் குழந்தைகள் சிலர் அறிவார்த்தமாகக், ‘குண்டோதராக இருக்கும் விநாயகர் எலி மீது அமர்ந்தால், எலி நசுங்கி விடாதா?’ என்று கேட்பதுண்டு. நாம் வழக்கமாக, ‘அப்படியெல்லாம் கேட்டால் சாமி தண்டித்து விடுவார்’ என்று நம் அறியாமைக்கு நொண்டிச் சாக்குச் சொல்லிவிடுவது உண்டு. அறியாமையின், ஆணவத்தின் ஒட்டுமொத்த வடிவாய் விளங்கும் யானைமுக அசுரனே விநாயகராய் நிற்கும் ஓசைவடிவான திருவருளின் முன்பு போருக்கு நிற்கும் போது எலி வடிவில் மாறி வருகின்றான். ‘ஞானம் அல்லது அறிவு என்கின்ற தந்தத்தினால் விநாயர் அவனுக்கு ஞானம் புகட்ட தம் தந்தத்தை ஆயுதமாகக் கொள்கிறார். அவன் ஞானம்பெற்ற நிலையில் விநாயகப் பெருமானின் திருவடிக்கு ஓடிவர அவனை வாகனமாகக் கொண்டார். எனவே விநாயகரின்  திருவடியில் கிடக்கின்ற எலி நம் வீட்டுச் சமையல் அறையில் வாழும் எலி அல்ல. அது திருந்திய யானைமுக அசுரனின் அடையாளம். அதனாலேயே  விநாயகர்  ௧பகு எலி நசுங்குவதில்லை என்று நம் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும். ஞானம் அல்லது அறிவு பெற்ற உயிர் இறைவன் சொற்படி கேட்டு வாகனம் போன்று இருக்கும் என்பதே அதன் தத்துவம். இதையறியாமல் நம்மில் சிலர் சாதாரண உயிர் வகையான எலிகளையெல்லாம் விநாயகர் என்று சொல்லி வணங்குவது தவறானதாகும் என்று சைவம் குறிப்பிடுகின்றது.

சிவம் என்கின்ற கடவுள் இவ்வுலக உயிர்களுக்கு அருள் புரியவும் உலகைப் படைக்கவும் கொண்ட முதல் அருள் வடிவம் ஓசை வடிவம் அல்லது பிரணவ வடிவம் அல்லது விநாயகர் வடிவம் என்பதனாலேயே அன்றாட வாழ்வில் எச்செயலைத் தொடங்கினாலும் சிவப்பரம்பொருளின் முதல் வடிவமான  ஓசை வடிவத்தை எண்ணிப் பார்ப்பதற்கும் வழிபடுவதற்கும் விநாயகரை வழிபடுகின்றோம். இங்கு உண்மை, அறிவு, இன்பம் என்கின்ற பரம்பொருளான சிவமும் விநாயகரும் வேறு அல்ல என்பதை உண்மைச் சைவர்கள் ஒருபோதும் மறப்பதில்லை. நம்மில் பலர் நம் கடவுளர்கள் திருமணம் பண்ணி வாழ்வது போன்று எண்ணி மயங்குகின்றனர். அவ்வாறே விநாயகருக்குச் சித்தி, புத்தி என்று இரு மனைவியர்கள் என்றும் இன்னும் சிலர் அவர் தாயைப் போன்றே மனைவி வேண்டுமென்று அரசமரத்தடியில் திருமணமாகாதவராகத் தவம் இருப்பதாகவும் உண்மையறியாமல் கூறுவர்.

ஓசை வடிவமாக வருகின்ற விநாயக் பெருமானின் ஆற்றலை, பலத்தை, சக்தியை, அருளை நாம் சித்தி புத்தி என்கிறோம். அவை இரண்டு  பெண்களல்ல! நம் தமிழர்கள் இறையருளை அம்மா, அம்பாள், சக்தி என்று கண்டு அவற்றிற்குப் பெண் வடிவம் கொடுத்தார்கள். அவ்வாறே இறைவனின் திருவருளுக்குப் பெண் வடிவங்கள் கிட்டின. சித்தி என்பது வெற்றி, புத்தி என்பது அறிவு. எனவே ஓசை வடிவாக நமக்கு அருள் பாலிக்க வருகின்ற  அச்சிவம் வெற்றியையும் அறிவையும் தம் அருள் ஆற்றல்களாகக் கொண்டு அருள் பாலிக்கின்றது என்று நாம் விநாயகரையும் அவர் சக்திகளையும்  காணும்போது விளங்கிக் கொள்ள வேண்டும். இதைச் சைவர்கள் நன்கு உணர வேண்டும். மேலும் ‘ஓம்’ என்கின்ற எழுத்து ஒரு யானையின் இடது காதில் தொடங்கி மேற்சென்று வலது காதில் இறங்கித் தும்பிக்கையில் சுழித்து முடிவு பெறுவது போலும் ‘உ’ என்கின்ற எழுத்தைப் போன்றும்  அமைந்திருத்தலினாலே யானையின் முகத்தை நம்மவர்கள் விநாயகரோடு ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ந்தனர். ஆனால் அதுவே இன்று நிலைத்து ‘ஓம்’ என்கின்ற அடிப்படைத் தத்துவம் மங்கி நம்மவர்கள் யானையை வழிபடுவது பெருகிவிட்டது. யானையைக் கடவுளாகவே கருதுவோரும் உண்டு. கரு,  முட்டை, விதை, வியர்வை என்று நால்வகையால் தோன்றும் எந்த ஒரு உயிரினமும் கடவுள் ஆக இயலாது என்பதனைச் சைவம் வலியுறுத்திக் கூறுவதைப்  பலரும் பின்பற்ற தவறுகின்றனர். யானை நம்மைப் போன்று பிறந்து இறக்கும் உயிர் என்பதனை மறவாது அதன் முகம் மட்டுமே ‘ஓம்’ என்கின்ற பிரணவத்தை நினைப்பிப்பது என்பதைக் கொள்ள வேண்டும். மற்ற உயிர்களைப் போன்று யானையிடமும் பரிவு காட்டுவது சிறந்தது என்று சான்றோர் கூறுவர். எனவே  விநாயகர் என்பது உண்மை, அறிவு, இன்பமாய்த் திகழும் சிவப்பரம்பொருளின் ஓசைவடிவமே அன்றி அவர் வேக் கடவுளோ அல்லது  சிவபெருமானின்  மகனோ அல்ல!